Thursday 2 March 2017

பாகம் 2 
அத்யாயம் ஐந்து
மதுரா அங்கு வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடி விட்டன. வசந்தா விடுப்பில் போய் இரண்டு மாதம் ஆயிற்று. இதற்குள் மதுரா திறம்பட வித்யாவின் வேலைகளை செய்துகொடுக்க தேர்ந்துவிட்டாள்அவன் எள் எனும் முன் எண்ணையாக நின்றாள். அவனுக்கு அனாவசியமான தொந்தரவு தராமல் ஆனால் அவனுக்கு வேண்டிய ஆவணங்கள், கோப்புகள் என்று தயார் செய்து வைத்தாள். அக்கௌண்ட்ஸில் அவ்வளவாக வேலை இல்லை என்பதால் இந்த வேலை முழுவதுமாக கவனமாக செய்ய முடிந்தது.

அப்போது வசந்தாவிற்கு சீமந்தம் என்று பத்திரிக்கை கொடுத்தாள்
.
அவளுக்கு ஏதேனும் நல்ல பரிசுப்பொருள் வாங்கலாமே என்று மதுரா தன் மற்ற பெண் பணியாளர்களோடு பேசி ஒரு சர்குலர் தயாரித்தாள். அதில் நூறிலிருந்து அவரவருக்கு விருப்பப்படி எவ்வளவு  வேண்டுமெனிலும் கொடுக்கலாம் என்று எழுதி ஆபிஸ் பையனிடம் கொடுத்து அனுப்பினாள். அவளுமே ஐநூறு போட்டிருந்தாள். மாலைக்குள் நல்ல கலெக்ஷன் ஆனது. வீடு செல்லுமுன் வித்யாவிடம் சில கோப்புகளில் கை ஒப்பம் வாங்கச் சென்றாள் அதை பெற்றுக்கொண்டு பயந்து தயங்கியபடி
சார் ஒரு சின்ன விஷயம், பேசலாமா?” என்றாள்.
ம்ம் என்றான் முகம் பார்க்காமல்.
இரண்டு நாளில் வசந்தா மேடமின் சீமந்தம் கூப்பிட்டிருக்காங்க...”
ஆமா அதுக்கு...” என்றான்.
இல்லை, அவங்களுக்கு ஏதேனும் நல்ல பரிசுப்பொருள் வாங்கலாம்னு நான்  ஸ்டாப் எல்லோரிடமும் கலெக்ட் பண்ணினேன்... தப்பா இருந்தா மன்னிக்கணும்... நீங்க... ஏதேனும்...”  என்று நிறுத்தினாள். அதற்குள் அவளுக்கு வியர்த்திருந்தது.

அவளை ஏறிட்டு
நல்ல விஷயம்தான்... குட்... கொடுங்க என்று வாங்கி தன் பங்கிற்கு ஆயிரம் என்று எழுதினான்.
என்ன வாங்கலாம்னு ஐடியா?” என்று கேட்டான்.
வசந்தா மேடமிடமே கேட்டோம், கிரிப் அதாவது தொட்டில் போன்றது வாங்கலாம்னு சொன்னாங்க... அதையே...”
ஓ இதெல்லாம் நீங்க லேடீஸுக்குதான் தெரியும்... அப்படியே செய்துடுங்க... நீங்களே போய் பாத்து நல்லதா வாங்கிடுங்க... மேலும் பணம் தேவைப்பட்ட கம்பனி கணக்கிலிருந்து கொடுக்கச் சொல்லுங்க... நான் அப்ரூவ் பண்ணறேன் என்றான். பின் அவனது வேலையில் மூழ்கினான்.

அட வசந்தா மேடம் சரியாத்தான் சொன்னாங்க... இவனுக்கு நல்ல மனசு என்று மெச்சியபடி நகர்ந்தாள்.
அன்று மாலையே அவளும் உஷவுமாக குழந்தைகளுக்குண்டான கடைக்கு சென்று தேர்வு செய்து வாங்கி வசந்தா வீட்டில் அடுத்த மாதம் டெலிவரி செய்யும்படி பணித்தனர். அதற்குண்டான பில், காரன்டீ எல்லாவற்றையும் அழகாக ஒரு கவரில் போட்டு ஒட்டி கையில் எடுத்துக்கொண்டுபோய் கொடுத்துவிடலாம் என தீர்மானித்தனர்.

மற்றைய நாள் வெள்ளியன்று எல்லோரும் வசந்தா வீட்டிற்குச் சென்றனர். அதிகாலையில் வளைகாப்பும் பின் சீமந்தமும் என ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. சிம்பிளான ஆனால் அந்த காலத்து கட்டிடம்.. சொந்த வீடு... அக்கம் பக்கம் நிறைய இடத்தோடு இருந்தது.
அங்கேயே பக்கத்து இடத்தில் கூரை வேய்ந்து சாப்பிட டேபிள் சேர் போட்டு ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரா தளிற்பச்சையில் மெல்லிய ஜரிகை கீற்று போட்ட சில்க் புடவையும் மாச்சிங் ப்ளவுசுமாக தயாரானாள். அதற்கு நீண்ட கழுத்து செயினும் காதில் குடை ஜிமிக்கி ஆட, இடுப்புக்கு மேலே சுருள் பந்தாக முடிந்த பின்னலில் கொஞ்சம் மல்லிகையுமாக ரெடியானாள். தன் டூ வீலரில் கிளம்பிச் சென்றாள். சீக்கிரமாகவே சென்றுவிட்டாள் மதுரா. அங்கு சென்று தன்னால் ஆன உதவிகளை செய்துகொண்டிருந்தாள். பின்னோடு உஷாவும் வந்து சேர்ந்துகொண்டாள். எல்லோருக்கும்  மஞ்சள் கும்குமம் கொடுக்க, வளையல்கள் அடுக்க என சிறு உதவிகள் செய்தபடி இருந்தனர்.

சீமந்தம் நடக்கும்போது மற்ற ஆபிஸ் பணியாளர்களும் வந்துசேர
, பின்னோடு வித்யாதரனும் தன் அன்னையோடு வந்தான். வசந்தா ஜாடை காண்பிக்க உஷாவும் மதுராவுமாக பார்வதியை உள்ளே அழைத்து வந்து அமரச்செய்து பேசிக்கொண்டிருந்தனர். வித்யா வசந்தாவின் கணவனோடு இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு போய் மற்ற ஸ்டாபோடு அமர்ந்துகொண்டான்

பின்னோடு சீமந்தம் முடிந்து சாப்பிட எனச் சென்றனர்
.
அங்கு ஒரே அல்லோகல்லமாக இருந்தது. கேடரிங் செய்பவர் இரண்டு உதவியாளருடன் மட்டுமே வந்து இங்கிருந்த கும்பலைக்கண்டு தவித்து போனார். இதில் எல்லோருக்கும் ஆபீஸ் போக அவசரமாகியது. எல்லோரும் ஒன்றாக முட்டிக்கொள்ள ஒருவழியாக ஒரு பந்தி முடிந்தது.

மறுபந்திக்கு ஆட்கள் முட்டிக்கொள்ள சட்டென்று அங்கிருந்த நிலைமை பார்த்து உஷாவின் காதோடு ஏதோ சொல்லி இரு பெண்களும் முந்தானையையும்
கொசுவத்தையும் இழுத்து சொருகிக்கொண்டு பரிமாறச் சென்றனர். வித்யாவும் அவனது அன்னையும் இன்னமும் பலரும் இதை ஆச்சர்யத்துடன் பார்த்திருந்தனர்.
இவள் கூட்டை எடுக்க உஷா பச்சடியை எடுக்க மளமளவென்று இலையில் பரிமாற ஆரம்பித்தனர். ஆபீஸ் ஸ்டாப் வந்து சகஜமாக பரிமாறுவதைக்கண்டு சட்டென சொந்தங்களில் இரு பெண்களும் ஆண்களுமாக கைகொடுத்தனர். பந்தி நல்லபடி நிறைவாக முடிந்தது. வசந்தா மதுராவின் கைகளை பிடித்தபடி நன்றியோடு கண் கலங்கினாள்.

உஸ் வசந்தா என்ன இது,  ஒண்ணுமே இல்லை, சின்ன ஹெல்ப் அவ்ளோதான். நீங்க அழவே கூடாதுஎன்று தேற்றினாள்
இல்ல மதுரா, இவர் ஆபீஸ்லேந்து நிறைய பேர் எதிர்பார்க்காம வந்துட்டா... சாப்பாடு நிறையத்தான் இருக்கு... ஆனா இந்த கூட்டத்தை கேடரர் எதிர்பார்கலை அதான் இப்படி...”
போகறது விடுங்கோ... நீங்க களைப்பா இருப்பேள் கொஞ்சம் ரெஸ்ட்  எடுங்கோ. குடிக்க ஏதேனும் கொண்டு வரட்டுமா?” என்றாள் ஆதுரமாக.
இல்லை இப்போ நாமள்ளம் தான் பாக்கி ஒண்ணாவே சாப்பிட ஒக்காந்துடலாம் என்றபடி எழுந்தாள்.

அடுத்த பந்தி சொன்னதுபோல வீட்டினரும் இவர்களது சில ஸ்டாபும் மட்டுமே என பாக்கி இருந்தனர்.
கேடரர் நன்றியோடு ரொம்ப தாங்க்ஸ் மா... நல்ல நேரத்தில கை கொடுத்தீங்க... எங்க பேர் கெட்டுப்போகாம காப்பாத்திட்டீங்கமா என்றார். “நீங்களும் ஒக்காந்துடுங்கமா... நாங்க பாத்துக்கறோம் என்றார்.
இருக்கட்டும் பரவாயில்லை முதல் ரவுண்ட் போட்டுட்டு ஒக்காரறோம் என்று பரிமாறிவிட்டு வந்தாள். அப்போதுதான் கவனித்தாள் பார்வதியும் வித்யாவும் கூட காத்திருப்பதை.

நீங்க அப்போவே சாப்பிட்டிருக்கலாமே மேடம்... ரொம்ப லேட் ஆயிடுச்சே, வாங்க சாப்பிடலாம் என்று கூறி அழைத்துச் சென்றாள்.
என்ன பொண்ணுமா நீ, ப்ரமாதம் போ. நீ ஒக்காருமா அப்போலேந்து அலையறே... நானும் வித்யாவும் இதோ வரோம்என்றார் அவர்.
சரி என்று இவள் போய் உஷாவை அடுத்து அமர்ந்தாள்.  வசந்தாவின் கணவன் வித்யாவையும் பார்வதியையும் அழைத்து போய் அதே பந்தி வரிசையின்  முதல் இரண்டு இடத்தை காண்பித்து அமரச் சொல்லி சென்றான்.
அம்மா நீ உள்ள போய் ஒக்காந்துக்கோ நான் கடைசில ஒக்காரறேன் என்றான் வித்யாதரன்.
என்னால உள்ள போய் ஒக்காந்து எழுந்துக்க முடியாது வித்யா... நீ உள்ள ஒக்காரு என்ன ஓரமா விட்டுடு என்று அமர்ந்துகொண்டார் பார்வதி.

கடனே என்று மதுராவின் அருகில் போய் அமர்ந்தான்
. அவள் முகம் காணாமல் குட் ஜாப் என்றான் முகம் மென்மையாக வைத்தபடி. தன்னைத்தான் சொல்கிறான் என்பதே மதுராவிற்கு சில நொடிகள் கழிந்தபின்னே உரைத்தது.
ஓ தாங்க்ஸ் சார்... இதெல்லாம் சின்ன ஹெல்ப்தானே என்றாள் புன்னகைத்தபடி. பின் ரசித்து உண்டனர்.
நான் அம்மாவை வீட்டில்விட்டு ஆபீஸ் போவேன்... நீங்க தேவைப்பட்டா வசந்தா மேடத்துக்கு ஏதானும் உதவி செஞ்சுட்டு நாளைக்கு வரலாம்.  ஒண்ணும் முக்கியமான வேலை இல்லை இன்று ஆபிசில் என்றான் எங்கோ பார்த்தபடி.
தாங்க்ஸ் சார். அதெல்லாம் தேவை இருக்கும்னு தோணலை சார்... நான் கேட்டுக்கறேன்... இல்லேன நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன் என்று சென்றுவிட்டாள்.

அத்யாயம் ஆறு
நாட்கள் மாதங்களாக துள்ளி ஓட மதுரா அந்த ஆபிசில் வேலைக்கென வந்து ஆறு மாதங்களுக்கு மேலாக ஆகி இருந்தது. இப்போது அவளை நம்பி ஆபிசை ஒப்படைத்துவிட்டு எங்கு என்ன வேலை என்றாலும் செல்லும் அளவு வித்யாதரனுக்கு அவள் மீது நம்பிக்கை வந்திருந்தது. ஆயினும் வாய்விட்டு சொல்லிவிடவில்லை.
பார்வதிக்குதான் பவித்ராவோடு அலைய முடியாமல் உடம்பு படுத்தியது.

ஒரு நல்ல ஆளா போடலாம்னா யாருமே நிக்க மாட்டேங்கறா... அதிலயும் பவி சமத்தாதான் நடந்துக்கறது இப்போ எல்லாம்... என்னடா பண்றது வித்யா... நீ இன்னொரு கல்யாணம்...”  என்று அவர் ஆரம்பிக்கும் முன்பே
ஏன் பண்ணி வெச்சீங்களே ஒருதரம் போறலையா... வேண்டாம்னு தலையா அடிச்சுகிட்டேனே யாரானும் கேட்டிங்களா என் பேச்சை... இன்னொரு முறையும் போய் குட்டையில விழணுமா... அம்மா, ஆள விடு... பவிய நானே பாத்துக்கறேன் என்று கத்திவிட்டு சென்றுவிட்டான்.

அப்பாவின் கோபத்தையும் கத்தலையும் கேட்ட பவி பயந்து நடுங்கி தானே சமத்தாக தயாரானது. ஆயினும் சிறு குழந்தை, மனதின் ஆழத்தில் தாய் பாசத்திற்கு ஏங்கியது. அதை புரிந்தும் இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இரவில் தன்
டாடியின் அணைப்பில் தூங்கினாலும் மற்ற நேரங்களில் அவளின் தனிமை, ஏக்கம் என வருந்தி பவிக்கு ஓயாமல் உடம்பு படுத்தியது. தனிமையில் அழுவாள் போலும். எங்கே தந்தையின் முன் அழுதால் திட்டுவான் என்ற பயம் உள்ளே இருக்க யாரும் அறியாமல் அழுதது குழந்தை. இதனால் நெஞ்சில் சளி எப்போதும் இருந்தது. மருந்து கொடுத்து வந்தார் பார்வதி. அவரால் ஆன வரை நல்லபல கதைகள் சொல்லி அரவணைத்து தான் பார்த்துக்கொண்டார்.

இதனிடையில் வித்யாதரன் பெங்களூரில் ஒரு கான்பரன்ஸ்  என்று போயிருந்தான்
. அடுத்த நாளே திரும்பிவிட ப்ளான் செய்து மதுராவிற்கு அங்கிருந்த ஆபிஸின் முகவரி நம்பர் எல்லாம் தெரியும்தானே என்று செக் செய்துகொண்டு சென்றான்.
அதிகாலை விமானத்தில் அங்கு போய் இறங்கி தன் மீட்டிங்கில் அவன் கவனமாயிருக்க, இங்கே குழந்தைக்கு நெஞ்சில் சளி முற்றியது. மூச்சுவிடவே சிரமப்பட்டது. அதை பார்த்து பார்வதி பயந்து போனாள். குடும்ப மருத்துவர் ஊரில் இல்லை என தகவல் தெரிந்தது.

உடனே சமயோசிதமாக ஆபிசிற்கு போன் செய்தாள்
.
அங்கே மதுரா போனை எடுக்க பார்வதி பதற்றத்துடன் அழுதபடி எல்லா விவரமும் சொல்ல முற்பட்டாள். மதுராவிற்கு ஒருவாறு விளங்கியது.
அம்மா நீங்க தைர்யமா இருங்கம்மா... நான் தோ வரேன் அங்கே... பயப்பட வேண்டாம் மா... குழந்தையோட மருத்துவ ரிப்போர்ட் ஏதானும் இருந்தா எடுத்து வையுங்க கூடவே என்ன மருந்து குடுக்கறீங்களோ அதுவும்... நான் கிளம்பீட்டேன்மா என்றாள்.

பின்னோடு போய் ஜி எம்மிடம் விவரம் சொல்லி ஒரு டாக்சி பிடித்துக்கொண்டு வித்யாவின் வீட்டை அடைந்து குழந்தையை தூக்கிக்கொண்டு மற்றவையும் எடுத்துக்கொண்டாள்
,
நீங்க வறீங்களா எப்பிடிமா, முடியுமா உங்களால.... இல்ல நான் போயிட்டு கூப்பிட்டு விவரம் சொல்லவா?” என்று கேட்டாள்.
நானும் வரேன் மதுரா... எனக்கு இங்க தனியா பயமா இருக்கும் என்றபடிகாமு வீட்டை பாத்துக்கோ நாங்க போயிட்டு வரோம் என்று கிளம்பினாள்.
இருவருமாக பக்கத்தில் இருந்த சுகவனம் மருத்துவமனை சென்று குழந்தையை சேர்த்தனர். அது குழந்தைகளுக்கான ஒரு நல்ல மருத்துவமனை. உடனே கவனிக்கப்பட்டது. கொஞ்சம் மூச்சு திணறல் அடங்கி குழந்தை உறங்கியது.

டாக்டர் வெளியே வந்து காச்மூச்சென திட்டி தீர்த்தார்
.
ஏன் மேடம் நீங்க எல்லாம் குழந்தை பெத்துக்கறீங்க, நெஞ்சில இவ்வளவு சளி கட்டி இருக்கு எப்பிடி கவனிக்காம விட்டீங்க... நிறைய அழுதிருப்பா போலிருக்கு... அதான் இந்த நிலைமை... ரொம்ப பயந்து ஒடுங்கி போயிருக்கா குழந்தை... என்னமா பெற்றோர் நீங்கள்ளாம்? பெத்துட்டா போறாதுமா என்று கத்தினார்.
பார்வதி அம்போவென பயந்தபடி வார்ட் வாசலில் ஒக்காந்திருக்க அத்தனை திட்டுகளையும் பேசாமல் வாங்கிக் கொண்டாள் மதுரா. “இப்போ எப்படி இருக்கு?” என்று மட்டும் கேட்டாள்.
இப்போ வந்து கேளுங்க... ட்ரீட் பண்ணியாச்சுது... தூங்கறா... அப்சர்வேஷனுக்காக நாளை வரை இங்கேயே இருக்கட்டும்... யாரு உங்க குடும்ப டாக்டர்?” என்று கேட்டுக்கொண்டார்.
இந்த இடைபட்டவேளையில் மதுரா பெங்களூரில் மீட்டிங் நடக்கும் ஆபிஸ் நம்பரை கூப்பிட்டு வித்யாவிற்கு அவசரச் செய்தி என்றும் அவனுக்கு ஒழிந்த உடனே இங்கே இந்த மருத்துவமனை நம்பரை கூப்பிடவேண்டும் எனவும் மெசேஜ் கூறி இருந்தாள்.

தனியே அமர்ந்திருந்த பார்வதியிடம் வந்து அம்மா, ஒண்ணும் பயப்படும்படி இல்லையாம்... ட்ரீட் பண்ணீட்டாங்க... பவி தூங்கறா... நாளைவரை இங்கேயே வைத்திருக்க சொல்லறாங்க என்று விவரம் கூறினாள்.
ஐயோ வித்யாவும் ஊரில் இல்லையே எப்போ வருவானோ மதுரா... நான் என்ன பண்ணுவேன் எனக் கலங்க.
ஒண்ணும் கவலைப்படாதீங்கமா... நான் இங்கேயே தான் இருக்கப்போறேன்... இப்போ பயப்படும்படி ஒன்றுமில்லைன்னு சொல்லிட்டாங்க... உங்கள நான் டாக்ஸில ஏத்திவிடறேன் நீங்க வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடுங்க.. சாப்பிட்டு தூங்குங்க மா... வேணும்னா மாலையில வந்து பாத்துக்கலாம். நான் சாருக்கு பெங்களூரில் தகவல் கொடுக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணீட்டேன்மா... நீங்கதான் தைர்யமா இருக்கணும்... என்று ஆறுதல் படுத்தினாள்.

அங்கே மருத்துவமனை பெஞ்சில் காலை தொங்கபோட்டபடி அமரவும் சிரமமாகவே இருந்தது பார்வதிக்கு
. சரி என அரைமனதாக ஒப்புக்கொண்டு குழந்தையை வெளியே இருந்தபடி ஒரு முறை பார்த்துவிட்டு டாக்சியில் கிளம்பினாள். அவள் வீடுசேரும் முன் மதுரா வீட்டிற்கு அழைத்து காமுவிடம் விவரம் சொன்னாள்.
அம்மாவை கூடவே இருந்து பாத்துக்குங்க காமு ஆண்ட்டி... ரொம்ப பயந்திருக்காங்க... அவங்க மாத்திரை எல்லாம் உங்களுக்கு தெரியும்தானே... பாத்து குடுத்திடுங்க... சாப்பிட வையுங்க... இங்க குழந்தைக்கு பரவாயில்லை... நான் இருக்கேன் பக்கத்தில... நீங்க அம்மாவை சமாளிச்சுப்பீங்க இல்லையா?” என்று கேட்டுக்கொண்டாள்.
நீ கவலைப்படாதேமா நான் பாத்துக்கறேன்... நீ குழந்தையப் பாரு, அது முக்கியம் என்று அவர் தைர்யம் கூறினார்.

மதுரா மருத்துவமனை வரவேற்பு பகுதிக்கு சென்று வினயமாக வேண்டிக்கொண்டாள்.
மேடம், குழந்தைக்கு முடியலைன்னு இங்க சேர்த்திருக்கு.... குழந்தையின் அப்பா வெளியூர் போயிருக்கார்..... இந்த நம்பரை குடுத்திருக்கேன்... அவர் கூப்பிடுவார்.... அவருக்கு நான் விவரம் சொன்னாத்தான் அவர் கிளம்ப முடியும்.... அவர் கூப்பிட்டா எனக்கு வந்து கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்என்றாள்.
கண்டிப்பா சொல்றேன் மாஎன்றார் அங்கிருந்த பெண்.
தாங்க்ஸ்என்று கூறிவிட்டு வந்து அமர்ந்தாள்.

மதியம் உணவுநேரம் தாண்டி அவசரமாக வித்யாதரன் கூப்பிட்டான்.
என்ன அவசரமா கூப்பிடுனு மெசேஜ் விட்டிருக்கே? இது என்ன நம்பர்.... ஹாஸ்பிடல் மாதிரி இருக்கு.... யாருக்கு என்ன?” என்றான் கவலையாக.
இல்ல குழந்தை பவிக்கு...” என்று மெல்ல ஆரம்பிக்கும் முன்பே
என்ன சொல்றே, என் பவிக்கு என்ன?” என்று தவித்தான்.
சுருக்கமாக விவரங்கள் கூறினாள்... டாக்டரின் நம்பரை தந்தாள்... அம்மாவை வீட்டிற்கு அனுப்பி காமுவை பார்த்துக்கொள்ளச் சொல்லி இருப்பதையும் கூறினாள்.
ஓ தாங்க்ஸ் அ லாட் மதுரா... உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றது பாராட்டறதுனே எனக்குத் தெரியல... நான் உடனே கிளம்ப முடியுமான்னு பார்க்கறேன்... எப்படியும் இரவிற்குள் வந்துடுவேன்... கொஞ்சம் பாத்துக்குங்க என்றான் கலங்கிப்போய்.
சார் ப்ளீஸ் காம் டவுன், நீங்க தைர்யமா இருங்க... பாப்பாக்கு பரவாயில்லைன்னு சொல்லீட்டார் டாக்டர்... இப்போ தூங்கறா... நீங்க நாளைக்கு வந்தாலும் நான் இங்கேயே இருப்பேன்... குழந்தை பக்கத்திலேயே... காட் இஸ் கிரேட் சார்.... ப்ளீஸ் டோன்ட் வர்ரி என்று தைர்யம் கூறினாள்.
தேங்க்ஸ் அ பஞ்ச... நான் டாக்டரோட பேசிட்டு அம்மாவையும் கூப்பிட்டு பேசறேன்... பயண ஏற்பாடு ஆனதும் மறுபடி இதே நம்பருக்கு கூப்படறேன் மதுரா... யு டேக் கேர் என்று வைத்தான்.

கொஞ்சம் நிம்மதியாக
, பேசாமல் பெஞ்சில் அமர்ந்தாள். நடுவில் இரு டீ மட்டுமே உள்ளே போயிருந்தது. பசி கிள்ளியது ஆயினும் குழந்தையை விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் அமர்ந்திருந்தாள்.
பின்னோடு உஷா வந்தாள். “என்னடி இப்போ பாப்பாவுக்கு எப்பிடி இருக்கு?” என்றபடி.
பரவாயில்லை உஷா என்றாள்.
அவள் சோர்வு கண்டு போ நான் டிபன் கொண்டுவந்தேன் உனக்கு, காண்டீன்ல போய் சாப்டுட்டு வா... அதுவரை நான் இங்க இருக்கேன் என்று அனுப்பினாள்.
ரொம்ப தாங்க்ஸ் உஷா என்றாள்.
சார்தான் போன் பண்ணி விவரம் சொல்லி அனுப்பிச்சாரு... நீ நகர முடியாம சாப்பிடாம இருப்பேன்னு கொண்டு குடுக்கச் சொன்னார் என்றாள் அவள்.

‘அட, வித்யாவிற்கு இதெல்லாம் கூட தோன்றி உள்ளதே இந்த அவசரத்திலும்’ என்று நெஞ்சு நன்றி கூறியது
.
சாப்பிட்டு வந்து உஷாவை அனுப்பினாள். சிறிது நேரத்தில் டாக்டர் வந்து குழந்தை இப்போ பைன் மேடம்... ஆனாலும் இங்கேயே இருக்கட்டும்... நாளைக் காலை வரை பாத்துட்டு டிஸ்சார்ஜ் பண்றோம் என்று சென்றார்.

பின்னோடு வித்யா கூப்பிட்டு தான் விமான நிலையத்திற்கு கிளம்பிவிட்டதாகவும் எப்படியும் இரவு எட்டு மணிக்குள் மருத்துவமனையில் இருப்பான் என்றும் தகவல் கூறினான்.
சரி நான் பாத்துக்கறேன்... இப்போதான் டாக்டர் குழந்தை நல்லா இருக்குனு வந்து சொல்லீட்டுப் போனார்... மாலை, என்னை உள்ளே அனுப்பறேன்னு சொல்லி இருக்கார் என்றாள்.
குழந்தை புதுசா என்னைப் பார்த்தா பயப்படுவாளோ என்னமோ. முடிஞ்சா அம்மாவை காமு ஆண்ட்டி துணையோட வரச்சொல்றேன் என்றாள்.
பாருங்க, முடிஞ்சா வரட்டும்... இல்லேனா நான்தான் வந்திடுவேனே. அவ்வளவா அழ மாட்டா... புது மனிதர்களை கண்டா பயம் எல்லாம் கிடையாது பவிகுட்டிக்கு என்றான் வித்யா.

மாலை ஐந்து மணிவாக்கில் டாக்டர் வந்து உள்ளே அழைத்துப் போனார்.
பவித்ரா, கண்ணத் திறந்து பாரும்மா யாரு வந்திருக்கான்னு... அம்மா பாரு என்றார்.
பவி மெல்ல கண் திறந்து பார்த்தது. மருந்தின் மயக்கம், ‘அம்ம்மாவா இவளா என் அம்மாவா என்ற குழப்பம் ஒரு பக்கம் ஆயினும் அம்மா என்ற அந்தச் சொல் மந்திரம் போல் வேலை செய்தது.
அம்மா என்று கிடந்தபடி இரு கை நீட்டியது. மதுரா தன்னை அறியாமல் அந்த கைகளுக்குள் போய் குழந்தையை அணைத்துக்கொண்டாள். அம்மாவின் அணைப்பில் பெரும் நிம்மதி கண்டது அந்த சிசு.

அப்பா எங்கேம்மா?” என்றது.
இன்னும் ஊரிலிருந்து வரலை தங்கம்... இப்போ வந்திடுவாங்க. உனக்காகத்தான் ஓடி வராங்க வேலை எல்லாம் விட்டுவிட்டு என்று லேசாக முத்தம் வைத்தாள்.
பவி அவளை அணைத்துக்கொண்டு கெட்டியாக இரு கன்னத்திலும் முத்தம் வைத்தது.
சரி பவிகுட்டி நீ படுத்துக்க... டாக்டர் அங்கிள் சொல்றதுபோல கேட்கணும்.. நீ குட் கர்ள் இல்லியா... அப்போதானே உடம்பு சீக்கிரமா குணமாகும் வீட்டுக்கு போலாம்...  நான் வெளில தான் இருக்கேன்... பயப்படமாட்டியே செல்லம் என்றாள்.
இல்லைமா நான் குட் கர்ளா இருப்பேன் என்றது. டாக்டர் அவளை வெளியே கூட்டி வந்தார்.

சாரி மேடம் நீங்க ரொம்ப பாசமுள்ள தாய்தான்... நான்தான் ஏதேதோ பேசிட்டேன் உங்கள காலையில என்றார் மன்னிப்பு தொனியில்.
டாக்டர் நான் குழந்தையோட அம்மா இல்லை என்றாள் மதுரா.
என்ன சொல்றீங்க, நீங்க அம்மா இல்லியா... குழந்தை அப்படித்தானே கூப்பிட்டா உங்கள?” என்றார் புருவம் முடிச்சிட.
இல்லை சார். நீங்க அம்மானு சொன்னதும் மருந்து மயக்கத்துல அப்படி நினைச்சுட்டாபோல... பவிக்கு அம்மா... இல்லை...  டாக்டர் என்றாள்.
ஓ மை காட், அப்போ, நீங்க... ?”
நான் பவியோட அப்பா கீழ் வேலை பார்க்கும் காரியதரிசி என்றாள். “என் பெயர் மதுரா
நம்பவே முடியாலைமா... நான் அவ்வளவு திட்டினேன் அப்போகூட ஒண்ணுமே சொல்லாம எல்லாத்தையும் கேட்டுகிட்டீங்க... முழு நாளும் இடத்தைவிட்டு நகராம இங்கேயே தவம் இருந்தீங்க...” என்று அடுக்கிக்கொண்டே போக.
அது என் கடமை டாக்டர்... என் பாஸ் ஊரில இல்லை... அவர் வந்து பொறுப்பெடுக்கும்வரை நான் இந்தக் குழந்தையை காக்கணும் இல்லையா என்றுவிட்டு போய் அமர்ந்துகொண்டாள். டாக்டர் அவளை ஒரு பிரமிப்போடு பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னோடு பார்வதியை அழைத்து அம்மா டாக்டர் பவிகுட்டிகிட்ட என்ன கூட்டிகிட்டு போனாரு... நல்லா இருக்காமா... சமத்தா இருக்கா. சாரும் எட்டுமணியோட வந்துடுவேன்னு போன் பண்ணினாரு நீங்க எப்படிமா இருக்கீங்க?” என்று கேட்டாள்.
அம்மாடி மதுரா, தெய்வம் போல வந்தே... வித்யா என்னையும் கூப்பிட்டான். வரேன்னு சொன்னான்... குழந்தை நல்லா இருக்காளா, ரொம்ப நிம்மதியா சந்தோஷமா இருக்குமா... நீ நல்லா இருக்கணும் ராஜாத்தி... யார் பெத்த பொண்ணோ”
“நான் நல்லாத்தான் இருக்கேன்... இப்போ என்னை அங்க அலைய வேண்டாம்னுட்டான் வித்யா... அவன்தான் வரானே மதுரா... அதுவரைக்கும் நீ அங்க இருப்பெதானே?” என்று கேட்டார்.
ஆமா மா, நான் இங்கேதான் இருப்பேன்... சரி, நீங்க கவலப்படாதீங்கம்மா என்று வைத்தாள்.

இரவு எட்டு அடிக்கும் முன்பே வித்யா பறந்துகொண்டு வந்துவிட்டான்.
என்ன, எப்படி இருக்கா பவி?” என்றான் வந்ததுமே.
நல்லா இருக்கா, நான் போய் பார்த்தேன் சமத்தாதான் இருக்கா என்றாள்.
நான் டாக்டர பாத்துட்டு வரேன் என்று ஓடினான். அவன் பதட்டம் பார்த்து மதுராவிற்கு பாவம் எனத் தோன்றியது.

பாகம் 3

வித்யாதரன் டாக்டரை பார்க்க, அவரோ பவித்ரா இஸ் பைன் மிஸ்டர் வித்யாதரன்... நல்ல நேரத்தில கொண்டு வந்துட்டாங்க... எதுக்கும் இருக்கட்டும்னு தான் அப்சர்வேஷனுக்கு இங்க இருக்கச் சொல்லி இருக்கேன்...
ஐ ஷுட் சே, நீங்க ரொம்ப லக்கி.. இப்படி ஒரு செக்ரட்டரி உங்களுக்கு... என்னமா ஹாண்டில் பண்ணினாங்க!  வந்தவுடன் நான் அவங்கதான் குழந்தையோட தாய்னு நினைச்சு கன்னாபின்னாவென திட்டிட்டேன்... ஒண்ணுமே பேசாம கேட்டுகிட்டாங்க. அங்க இங்க நகரல.
குழந்தைகிட்ட கூட்டி போய் அம்மா பாருன்னு சொன்னேன்
... பவி உடனே ஒட்டிகிட்டா, அம்மான்னு ஒரே கொஞ்சல்தான்... அவள நல்லபடியா அணைச்சு முத்தமிட்டு படுக்கவைத்துட்டு வெளில வந்து சொல்றாங்க நான் தாய் இல்லைன்னு... எனக்கு ஒரே அதிர்ச்சி... தாயில்லா குழந்தையா உங்க பவி? இவங்கள தாயா நினைச்சு அவ கொஞ்சினத பார்த்ததும் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வரலை மிஸ்டர் வித்யாதரன் என்றார்.
வித்யாவிற்கு ஆச்சர்யம், கோபம், வருத்தம், ஆறுதல் எல்லாமுமாக தோன்றியது.
ரொம்ப தாங்க்ஸ் டாக்டர். நான் பவிய பார்க்கலாமா ப்ளீஸ்?” என்றான்.
ஷ்யூர்என்று அனுப்பினார். அங்கே போக, பவி சமத்தாக படுத்து கொண்டிருந்தது. ட்யுபில் ஏதோ மருந்து ஏறிக்கொண்டிருந்தது.
பவிமா என்றான் மெதுவாக.
டாடி என்று எழுந்து கொண்டது.
எப்பிடிடா இருக்கே குட்டிமா?” என்று கேட்கும்போதே அவனுக்கு கலங்கியது.
ஐயோ என் செல்ல மகள் அனாதைபோல மருத்துவமனையில் என்று கதறியது நெஞ்சம். ஆயினும் மதுரா அங்கிருந்து நகரக்கூட இல்லையாமே என்ன பெண் இவள். தெய்வம் போல பார்த்துக்கொண்டாளே என் மகளை என நினைத்துக்கொண்டான்.

மகளை அணைத்து தட்டிக் கொடுத்தான்
.
டாடி அம்மா வந்தாங்க என்ன பார்க்க தெரியுமா என்றது உற்சாகமாக.
வித்யாவிற்கு திக்கென்றது. ‘ஐயோ இவள் இதையே பிடித்துக்கொண்டால் நான் என்ன செய்வேன், இப்போதே இந்த எண்ணத்தை மாற்ற வேண்டுமே என எண்ணினான்.
அது அம்மா இல்லைடா செல்லம் என்றான் மெதுவாக.
இல்லைப்பா, டாக்டர் அங்கிள் கூட சொன்னாரே, அது அம்மாதான்... என்ன கட்டி பிடிச்சுகிட்டு முத்தம் கூட கொடுத்தாங்க... டாடி சீக்கிரமா வந்திடுவாங்க அதுவரைக்கும் சமத்தா இருக்கணும்னு சொன்னாங்களே என்றது.
கெட்டுது என்று எண்ணிக்கொண்டான். ‘சரி முதலில் உடம்பு குணமாகட்டும் பின் மெல்ல புரியவைக்கலாம் என எண்ணி பேசாமலிருந்தான்.

அம்மாவையும் கூப்பிடு டாடி என்றது. வேறு வழி இன்றி நர்சைவிட்டு அழைத்து வரச் சொன்னான்.
அம்மா என்று அவளிடம் கை நீட்டியது. மதுராவிற்கோ தர்மசங்கடம் ஆனது.
மெல்ல அவளருகில் போய் எப்படி இருக்கீங்க குட்டி?” என்றாள்.
நான் நல்லா இருக்கேன் மம்மி என்றது. வித்யாவை பார்க்கவும் கூசியது மதுராவிற்கு.
சரி படுத்துக்குங்க... நான் நாளைக்கு வரேன்.. இப்போ நான் வீட்டுக்கு போகணுமே தங்கம் என்றாள்.
கூடாது என்னோடதான் இருக்கணும் என்று அடம் செய்தது.
சரியாபோச்சு இது எங்க போய் முடியும் என்று திணறினர் இருவரும் .
இல்லை தங்கம் அங்க பாட்டி தனியா இருக்காங்க இல்ல... உடம்பு வேற முடியல... உனக்கு முடியலைன்னு கவலப்பட்டு பயந்துட்டாங்கடா குட்டி... நான் போய் அவங்கள பாத்துக்கணுமே என்றாள் அப்போதைக்கு.
வித்யா அவளை ஆச்சர்யமா இல்லை திடுக்கிடலா என்று புரியாத பார்வை பார்த்தான். ‘ப்ளீஸ் என்று கண்ணால் கெஞ்சினாள்.
சரி என்று ஒத்துக்கொண்டது பவி.
நான் இங்கே நைட் தங்கறேன் நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க மதுரா என்றான்.
தனியா எப்படி.. நான் கொண்டுவிடவா?”  என்றான். “உங்க வீட்டில இன்பார்ம் பண்ணீட்டீங்கதானே?” என்றான்.
அப்படி யாரும் எனக்கில்லை சார்... நான் யாருக்கும் சொல்லவேண்டியதில்லை என்றாள்.
நான் ஒரு டாக்ஸில போய்டறேன் சார் என்றாள்.
நோ நோ  வேண்டாம். இந்த வேளையில என்றான். பின் டாக்டரிடம் போய் ஏதோ பேசிவிட்டு

இங்கேயே ஒரு ரூம் குடுக்க சொல்லி கேட்டுகிட்டேன்... நீங்க இரவு நேரத்தில தனியா எங்கேயும் போக வேண்டாம்... அங்கே படுத்து நிம்மதியா தூங்குங்க... பொழுது விடியட்டும் பார்க்கலாம் என்றான்.
சரி அதுவும் நல்லதுதான் என்று அந்த அறையில் போய் பெட்டில் படுத்தாள்.
அவள் ஒன்றும் சாப்பிடிருக்க மாட்டாளே என்று தோன்றி காண்டீனிலிருந்து வாங்கிக்கொண்டுபோய் தந்தான்.
சாப்பிட்டு படுங்க குட் நைட் என்று சென்றுவிட்டான். அவனே சோர்வாகத் தெரிந்தான். காலை நான்கு மணிக்கு எழுந்து அதிகாலை விமானத்தில் பறந்தவன் அப்போதிலிருந்து அமரக்கூட நேரம் இருக்கவில்லைதானே.
நீங்க சாப்டீங்களா?” என்று கேட்டாள்.

அவளை நன்றியோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு
நான் இப்போ அங்கேதான் போறேன் சாப்பிட... நீங்க சாப்பிட்டு படுங்க என்று சென்றான்.
அவள் சாப்பிட்டு தூங்கிப் போனாள். சட்டென்று முழிப்பு வந்தது மணி பார்த்தாள் இரண்டு என்றது. வித்யாவும் தூங்கவே இல்லையே என்று இழுத்து போர்த்திக்கொண்டு மெல்ல குழந்தை இருக்கும் அறையின் பக்கம் சென்றாள். அவள் அயர்ந்து உறங்கிகொண்டிருக்க, அங்கிருந்த பெஞ்சில் தன் ஆறடி உயரத்தை குறுக்கியபடி சாய்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தான் வித்யா. அவளுக்குள் ஏதோ உடைந்தது.

மெல்ல அருகில் போய்
சார் என்றாள். பதில் இல்லை. “வித்யா என்றாள் பின் மெல்ல அவன் தோள் தொட்டாள் கூச்சத்தோடு. திடுக்கிட்டு முழித்தான். அவளை அங்குகண்டு முதலில் ஒன்றும் புரியாமல் என்ன என்ன என்றான் பதற்றமாக.
ஒன்றுமில்லை நான்தான்... கொஞ்ச நேரம் நல்லா தூங்கீட்டேன்... நீங்க அந்த அறையில போய் நீட்டி படுத்து கொஞ்சமானும் தூங்குங்க சார்... நான் இங்க இருந்து பாத்துக்கறேன் என்றாள்.
இல்ல வேண்டாம் என்று அவன் வாய்தான் கூறியது. ‘ப்ளீஸ் என்றாள். உடனே ஒத்துக்கொண்டு போனான். இரு நிமிடங்களில் உறங்கிப் போனான். நடுவில் ஒரு முறை குழந்தையை எட்டிப் பார்த்துவிட்டு வந்து புடவை தலைப்பை இழுத்து போர்த்துக்கொண்டு மடங்கி படுத்தாள் பெஞ்சில். உறக்கமும் முழிப்புமாக கழிந்தது.

காலை ஆறு மணி அளவில் யாரோ கூப்பிடுவதுபோலத் தோன்றி முழித்தாள்
. வித்யாதான் கையில் இரு கப் காபியுடன் நின்றிருந்தான்.
குட் மார்னிங், இந்தாங்க காபி. குடிச்சுட்டு நீங்க வேணா வீட்டுக்கு கிளம்புங்க... பாவம், எங்களால உங்களுக்கு ரொம்பவே தொந்தரவு என்றான் குற்ற உணர்ச்சியுடன்.
அதெல்லாம் ஒன்றுமில்லை. ஐ ஆம் பைன் என்றாள். “டாக்டர் என்ன சொல்றார்னு பாத்துட்டு போறேன் என்றாள்.

எட்டு மணியோடு டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு நார்மலா இருக்கா வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்... ஜாக்ராதையா பார்த்துக்குங்க. ரிலாப்ஸ் ஆகக்கூடாது என்றுவிட்டு சென்றார்.
ஹப்பா என்றிருந்தது இருவருக்கும். உள்ளே போய் பவி என்று அவளை அள்ளிக்கொண்டான் வித்யா. அவனோடு இறுக்கிக்கொண்டே அவனுக்குபின் பார்த்தது பவி.
அம்மா என்றது இவனிடம் இருந்தபடி அவளைநோக்கி கைநீட்டியது. பக்கத்தில் வந்து தயக்கத்தோடு கைகொடுத்தாள் மதுரா.
டாக்டர் வீட்டிற்கு போலாம்னு சொல்லீட்டாரே போலாமா தங்கம்ஸ்?” என்றான் வித்யா.
ஓ போலாமே அம்மாவும் நானும் நீயும் வீட்டுக்கு ஒண்ணா ஜாலியா போலாம் பா என்றது.

இருவரும் திக்கென ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்
. முதலில் கிளம்புவோம் என்று அவளை கூட்டிக்கொண்டு வெளியே வந்தனர். அவன் பில் செட்டில் செய்து எல்லாம் முடிக்கும்வரை மதுராவின் கையில் ஜம்மென அமர்ந்து கொண்டாள் பவி... கொஞ்சம் சோர்வு இருந்தது. சொக்கி விழுந்தபடி இருந்தாள்.
உன்னை வீட்டில் விட்டு போறேன் என்றான் வித்யா.
பவி முழிச்சுட்டா உங்களுக்கு கஷ்டம் ஆயிடும்... வீட்டிற்கு வந்து படுக்கவைத்துவிட்டு நானே போய்க்கறேன் என்றாள் ஆங்கிலத்தில் மெல்லிய குரலில் பவிக்கு கேட்காமல். சரி என்று டாக்சி பிடித்துச் சென்றனர். வீடு செல்வதற்குள் பவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை அறையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்து பார்வதி கொடுத்த காபியை குடித்துவிட்டு அதே டாக்சியில் கிளம்பினாள் மதுரா. வித்யா வாசல்வரை வந்து நன்றி சொன்னான்.
இட்ஸ் ஓகே சார் என்று புன்னகையோடு கிளம்பிவிட்டாள்.

வித்யா உள்ளே வர, அம்மா மதுரா புராணத்தை ஆரம்பித்தாள்
. அவர் ஒவ்வொன்றும் விவரிக்க வித்யா கேட்டபடி சிலையாய் சமைந்தான். மூன்றுமாத சிசுவை விட்டுச் சென்றாளே அவளும் ஒரு பெண். யாரோ பெற்ற பிள்ளையை இதோ காப்பாற்றிவிட்டு செல்கிறாளே இவளும் ஒரு பெண்... என்றெண்ணி பெருமூச்சுவிட்டான். வருடங்களுக்கு பிறகு பெண் என்பவளின் மீது உண்டான வெறுப்பு மறந்து மரியாதை வந்தது.

அத்யாயம் ஏழு
வீட்டை அடைந்த மதுரா, வழியில் வரும்போதே வாங்கி வந்திருந்த சிற்றுண்டிகளையும் பாலையும் வைத்துவிட்டு போய் அலுப்பு தீர குளித்தாள். தூக்கமும் அசதியும் வாட்டியது. சிரமப்பட்டு கொஞ்சம் உண்டுவிட்டு பாலையும் தயிர்சாத பொட்டலத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாள். மணி பத்து என்றது கடிகாரம். அப்போது வாயிற்கதவை தாழிட்டு போய் படுக்கையில் விழுந்தவள்தான். அடுத்த நிமிடம் அசந்து தூங்கிவிட்டாள்.

எத்தனை நேரம் அப்படி கிடந்தாளோ எங்கேயோ யாரோ மணி அடிப்பதுபோல கேட்டது தூக்கத்தில்
. மெல்ல கண்விழித்து பார்க்க மணி மூன்று. ‘என்ன சத்தம் என்று பார்க்க போன் அலறிக்கொண்டிருந்த்து. கூடவே அவளது அபார்ட்மெண்ட் செக்யுரிட்டி மணியும்.

துள்ளி எழுந்து போனை எடுத்தாள்
. வித்யாதரன் தான் பேசினான்.
என்ன எங்க இருக்கீங்க? போன் ரொம்ப நேரமா ட்ரை பண்றேன் எடுக்கலை நிஜமாவே பயந்துட்டேன் என்றான் பதற்றமாக.
தூங்கீட்டேன், ஒரு நிமிடம் செக்யுரிட்டி போனும் அடிக்குது ப்ளீஸ் லைன்ல இருங்க சார் என்றாள்.
அதுவும் நான்தான். இங்க கீழ உன் பில்டிங்க்லதான் நிக்கறேன்... இங்க உள்ள விடணும்னா நீ சரின்னு சொல்லணுமாமே என்றான்.
ஓ, சாரி சார், நான் பேசறேன்.. நீங்க மேல வாங்க என்று அங்கே கூப்பிட்டு அவனை மேலே அனுப்பச்சொன்னாள்.

ஐயோ இவன் இப்போது எதற்கு இங்கே, குழந்தைக்கு ஏதானும்... நான்வேறு இந்த தூங்கி எழுந்து நிலையில் கலைந்த தலையுமாக நைட்டியில் நிற்கிறேனே... இப்போது மேலே வந்துவிடுவானே என்று பதறி நைட்டியை சரியாக இழுத்துவிட்டு தலைகோதி ஒரு கிளிப் போட்டாள். சட்டென்று முகம் அலம்பினாள். அதற்குள் வாசலில் மணி அடித்தது.

வாங்க சார் என்று வரவேற்றாள். உட்காரச்சொன்னாள்.
அவள் நிலைகண்டு அவனுக்கும் தர்மசங்கடம் ஆகியது.
சாரி நான் போன் பண்ணீட்டுதான் வரணும்னு, நீங்க போனையே எடுக்கல. அம்மாவிற்கு பயம் உங்களுக்கு எதுவானும் ஆயிடுச்சோ நேத்து புள்ளா  மருத்துவமனையிலேயே இருந்துட்டீங்களேன்னு அதான் புறப்பட்டு வந்துட்டேன் என்றான் அவள் முகம் காணாமல்.

பரவாயில்லை சார். குழந்தைக்கு ஏதானும்...” என்றாள்.
ஆம் மதுரா, பவி எழுந்துட்டா... ஒரே அழுகை அம்மா வேணும்னு அமர்க்களம்
அங்கே நாங்க யார் சொல்லியும் கேட்கலை
... டாக்டர் வேற மேலும் அழாம பாத்துக்கச் சொல்லி இருக்காரு... மெள்ள மெள்ளமாத்தான் புரியவைக்கணும் இல்லியா. மன்னிச்சுக்குங்க, திரும்ப திரும்ப உங்கள சிரமப்படுத்தறேன். கொஞ்சம் வரமுடியுமா?” என்றான் தயங்கியபடி.
ஓ அப்படியா. சாரி நான் வந்து படுத்து அசந்து தூங்கீட்டேன் இல்லேனா உங்களுக்கு இந்த சிரமம் இருந்திருக்காது... அப்போதே போனில் விஷயம் தெரிந்திருந்தால் நானே கிளம்பி வந்திருப்பேன் இந்நேரம் என்றாள் மன்னிப்பாக.
தோ ஒரு நொடியில வந்துடறேன் சார் என்றபடி உள்ளே மாயமானாள்.

வித்யா, உட்கார்ந்த இடத்திலேயே
, அவளது அந்தச் சின்ன அபார்ட்மெண்டை சுற்றிபார்த்தான். கச்சிதமாக அழகாக இருந்தது. லட்சுமிகரமாக விளங்கியது.  சுத்தமாக இருந்தது.
ஷோகேசில் சில புகைப்படங்கள் இருந்தன... அருகில் சென்று பார்த்தான். மதுரா பெற்றோருடன் போலும், சின்னப் பெண்ணாக, பின் கல்லூரி பருவத்திலும். அதன் அடுத்தபடியாக இன்னமொரு சம வயது பெண்ணோடு இருந்தாள் ஒரு படத்தில்.
பெற்றோர் இப்போது இல்லையா, தனக்கென யாரும் இல்லை... பாவம் இது என்ன கொடுமை. இந்த வயதில் தனியாக. அதுதான் இவ்வளவு உயர்ந்த செக்யுரிட்டி உள்ள வீட்டில் இருக்கிறாள். ரொம்பவே ஸ்மார்ட் என்று மெச்சிக்கொண்டான்.
ஐந்து நிமிடத்தில் வேறு உடை மாற்றி தலை சீவி பின்னலிட்டு கையில் காபியுடன் பிரசன்னமானாள் மலர்ந்த சிரிப்போடு.
இந்தாங்க சார். நீங்க காபிதான் குடிப்பீங்கனு தெரியும்... முத முறையா வீட்டிற்கு வந்திருக்கீங்க, ப்ளீஸ் எடுத்துக்குங்க... நான் ரெடி, குடித்து முடித்ததும் கிளம்பலாம் என்றபடி எதிரே அமர்ந்தாள் தன் காபி கோப்பையுடன். இருவரும் பேசாமல் அருந்திமுடித்து கிளம்பினர்.
அவள் கைபையை ஒருமுறை சரிபார்த்துவிட்டு சாவிகொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு வந்தாள். அவன் காரை எடுக்க, போய் அமர்ந்தாள்.

ரொம்ப தாங்க்ஸ் மதுரா. இந்த உதவிக்கு எல்லாம் எப்படி நான் நன்றி சொன்னாலும் போதாது. என்ன கைம்மாறு செய்யப்போறேனோ என்றான் வண்டி ஓட்டியபடி.
ப்ளீஸ் சார். இட்ஸ் நத்திங். விட்டுடுங்க என்றபடி வெளியில் பார்த்தாள்.
வீட்டை அடைந்ததுதான் தாமதம் பவியின் அழுகுரல் வாசல் வரை கேட்டது.

ஐயோ என்றபடி சட்டென இறங்கி உள்ளே ஓடினாள். ஓடிப்போய் அவள் அறையில் காண மம்மீ என்று அலறிக்கொண்டு ஓடிவந்தது.
ஐயோ செல்லம், அப்படி ஓடக்கூடாது... நான்தான் வந்துட்டேனே டா... அழுகை நிறுத்து... சமத்து இல்லை என் தங்கம் இல்லை என்று இடுப்பில் தூக்கிக்கொண்டு தோளில் சாயத்துக்கொண்டாள். அப்போதும் விக்கியபடி இருந்தது. லேசாக உடம்பு சுட்டது. பின்னோடு உள்ளே வந்த வித்யா இவை அனைத்தையும் கண்டு மனம் நிம்மதி உண்டாயிற்று. ‘ஆனால் எத்தனை நாள் இப்படி...’ என்ற பயமும் வந்தது.
லேசா சுடுதே சார் என்றாள்.
ம்ம் ஆமாம் டாக்டரை கூப்பிட்டு கேட்டேன்... கொஞ்சம் இருக்கும்... அதே மருந்த கண்டின்யு பண்ணினா போதும்... இரண்டு நாள் கழித்து கூட்டி வாங்கன்னு சொன்னார் என்றான். அப்படியே அவளை தோளில் சாய்த்துக்கொண்டே தட்டிகொடுத்தபடி மெல்ல நடந்தாள் மதுரா. ‘தாயில்லா தனக்கு அந்தச் சின்ன பிஞ்சின் மனதின் ஏக்கம் புரியாதா என்று எண்ணினாள்.

அம்மாவைக் கண்ட நிம்மதியில் தூங்கியது பவி
. ஆயினும் கையில் கெட்டியாக அவளின் புடவை நுனியை பிடித்திருந்தது. அவளை படுக்கையில் படுக்கவைத்து நிமிரப்போனாள் மதுரா. முந்தானை நுனி பவியின் கையில் வகையாய் சிக்கி இருக்க புடவை நெகிழ்ந்தது. ஒரே கூச்சமும் வெட்கமுமாக சட்டென்று குனிந்துகொண்டாள். குழந்தையோடு ஒட்டி நின்று மெல்ல தன் புடவையை விடுவித்தாள். இதை ஒரு கணம் கண்டுவிட, வித்யா சரேலென அங்கிருந்து நகர்ந்து வெளியேறிவிட்டான்.

அவளும் வெளியே வர பார்வதி அவள் கையை பிடித்து மதுரா மன்னிச்சுக்கோமா... குழந்தை இப்படி அடம் பிடிப்பானு நினைக்கலை. உன்னை மறுபடியும் தொந்தரவு பண்றோம் என்றாள்.
அதேல்லாம் ஒண்ணும் இல்லைமா... நீங்க எப்பிடி இருக்கீங்க, உடம்பு தேவலையா?” என்று கேட்டாள்.
காமு காபி தரவா?” என வந்தார்.
வேண்டாம் ஆண்ட்டி, இப்போதான் கிளம்பும் முன் சாருக்கும் எனக்குமாக அங்கே கலந்தேன் என்று மறுத்தாள்.
கொஞ்ச நேரம் டிவி பார்த்தபடி அமர, “மதுரா ஒரு ரிக்வெஸ்ட் என்றான் மெல்ல
என்ன சார்?” என்றாள்.
இன்னிக்கி நைட் இங்க...”  என்று அவன் தயங்க, “அம்மா மதுரா இன்னிக்கி மட்டும் இங்கே தங்கமுடியுமா உங்க வீட்டுல ஏதானும் சொல்லுவாளா?” என்றார் பார்வதியும்.
இல்லை அதேல்லாம் இல்லைமா... சரி தங்கறேன் என்றாள் மிகுந்த தயக்கத்துடன்.
ரொம்ப தாங்க்ஸ்... இப்படி ஆயிடுச்சு... மன்னிச்சுடுங்க என்றுவிட்டு வித்யா மேலே சென்றுவிட்டான் தன் வேலைகளை பார்க்க என.

அத்யாயம் எட்டு
ஏம்மா உங்க வீட்டில யாரெல்லாம் இருக்கா உன்னைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே?” என்று கேட்டார் பார்வதி.
எனக்குனு யாரும் இல்லைமா... நான் ஒற்றைப் பொண்ணு... நான் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும்போதே ஒரு கார் விபத்துல அம்மா அப்பா போய்ட்டாங்க... சுற்றமும் சொந்தமும் என் சுமை வேண்டாம்னு ஓடிட்டாங்க... நான் இருந்தத வெச்சு படிச்சு முடிச்சு வேலைய தேடிகிட்டேன்... எனக்குனு தனியா சின்னதா ஒரு பிளாட் வாங்கி அதில் தனியாத்தான் இருக்கேன்மா என்றாள் குரல் கம்மியது ஆனால் ஒரு நிமிர்வோடு இருந்தாள்.

அடப்பாவமே. என்னடி இது கொடுமை. ஒன்னப்போல ஒரு நல்ல பொண்ணுக்கு...” என்று அங்கலாய்த்தார் பார்வதி.
இத்தனை வருடமா தனியாவா இருக்கே?” என்றார்
இல்லைமா. எனக்கு வசுமதினு ஒரு நெருங்கிய தோழி இருக்கா... அவ பெற்றோர் இப்போ மதுரையில இருக்காங்க... பள்ளிவரை ஒண்ணா படிச்சோம். கல்லூரியின்போது அவள் முதல் ஆண்டு என்னோட  சேர முடியல.. அங்கேயே ஏதோ கல்லூரியில சேர்ந்தா. அங்கே ஒண்ணும் சரியாவரலை. அதற்குள்ளதான் என் வாழ்க்கையில சூறாவளி . பிறகு நான் இங்கே வீடு வாங்கி குடிவந்ததும், அவ பெற்றோர் அவள என்கூட அதே கல்லூரியில சேர்த்து என்னோடவே இருக்கவும் சம்மதிச்சாங்க.
இடைப்பட்ட விடுமுறைகள்ள நாங்க ரெண்டு பேருமா அங்க அவங்க வீட்டுக்கு போய்டுவோம். கல்லூரி மற்றும் எம் பி ஏ முடித்தோம். இருவருக்கும் ஒரே அலுவலகத்தில வேலையும் கிடைத்தது. போன ஆண்டு வரைக்கும் ஒண்ணாவே இருந்தோம். இப்போதான் அவங்க வீட்டில அவளுக்கு வரன் பாத்துட்டாங்க. அதனால அவ பெற்றோரோட இருக்கா. இந்த சில மாதமா தனியா இருக்கேன் என்றாள் பெருமூச்சோடு.

அதற்குள் அம்மா என்று கூப்பிட்டது பவி. பார்வதியை ஒரு சங்கடப் பார்வை பார்த்தபடி எழுந்து ஓடினாள்.
என்னடா செல்லம் இங்கேதான் இருக்கேன்... எங்கியும் போ மாட்டேன்.. நீ தூங்கு கண்ணு என்று தட்டிக்கொடுத்தாள்.
தூக்கம் வல்லை என்றது.
சரி ஏதானும் சாப்பிட்டியோ?” என்று கேட்டாள்.
எங்க. ஒண்ணுமே தொடலை.. மருந்து மட்டும்தான் வித்யா அதட்டி மெரட்டி குடுத்தான்... அதுக்கே ஆர்பாட்டம் தாங்கலை என்றார் பார்வதி.
அச்சோடா அப்படீன்னா தங்கம், நீங்க பாட் கர்ளா? என்றாள்.
இல்லை என்றது
குட் கர்ள்னா  ஏதானும் சாப்பிடணுமே என்றாள். சரி என்று தலை அசைத்தது.

என்னம்மா ஆகாரம்?” என்று கேட்டாள். அவளது ரிப்போர்டை எடுத்து பார்த்தாள். இளம் சூடாக பால் பானங்கள் அல்லது சூப் , மற்றும் ரசம் சாதம் என்று இருந்தது.
சரிமா இப்போ சூப் குடுக்கறேன். இரவு வேணா ஹார்லிக்ஸ் மாறி ஏதானும் குடுக்கலாம்...” என்று கூறிக்கொண்டே சமையல் அறைக்கு சென்றாள். ‘என்ன நான் பாட்டுக்கு சுவாதீனமாக இப்படி என்று எண்ணி வெளியே வந்து அம்மா சூப் காமு ஆண்ட்டிகிட்ட பண்ணிகுடுக்க சொல்லட்டுமா என்றாள் தயங்கியபடி.
அதெல்லாம் அவளுக்கு பண்ணத் தெரியாது மதுரா... நாமதான் பண்ணணும் நானே வரேன் என்று அவர் மெல்ல எழுந்திருக்க,
அப்படீன்னா நானே பண்றேன்.. நீங்க உக்காருங்கமா என்று உள்ளே போனாள்.

உள்ளே சென்று கொஞ்சம் காரட், காபேஜ், பீன்ஸ், உருளை என எடுத்துக்கொண்டு சன்னமாக துருவினாள்.  பின் காமுவிடம் கேட்டு கார்ன் மாவு வாங்கி வைத்துக்கொண்டாள். காய்களை வேகவைத்து பின் அதே நீரில் கொஞ்சமாக உப்பும் மிளகுபொடியும் தூவி கார்ன் மாவையும் ஒரு ஸ்பூன் போட்டு கொஞ்சமாக பால்விட்டு இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி ஆற்றினாள். பொருக்கும் சூட்டில் ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள்.

பவிகுட்டி வாங்க சமத்தா இத குடிப்பீங்களாம்... அப்போதான் நீங்க குட் கர்ள் என்று தாஜா செய்தாள்.
நான் கார்டூன் பார்த்துண்டே சாப்பிடுவேன் என்றது.
 சரியென டிவியின் முன் சோபாவில் அவளை தன் மடியில் அமர்த்தி கொஞ்சமாக ஸ்பூனால் ஊட்டிவிட்டாள். துளியும் சிந்தாது, அடம் பிடிக்காது சமத்தாக சாப்பிட்டது பவி. அப்போது அதைக்கண்டபடி கீழே இறங்கி வந்தான் வித்யா ஒரு இயலாமை பார்வையோடு.

அடிப்போக்கிரி இதப் பாரேன் வித்யா, உலக அதிசயம்... அடம் பண்ணாம மிச்சம் வைக்காம சாப்பிட்டுடுத்து என்று மெச்சிக்கொண்டார். மதுரா உள்ளே சென்றிருக்க என்னமா நீ, ஏதோ உதவிக்குனு கூப்பிடிருக்கோம் அவங்களைப் போய் இதெல்லாம் செய்ய சொல்லிக்கிட்டு... சூப் இல்லைனா வெறும் ரசம் சாதமா நீயே ஊட்டி இருக்கக் கூடாத, இல்லேனா நான் வந்து செய்திருப்பேனே என்று கடிந்துகொண்டான்.
நான் ஒண்ணுமே சொல்லலைபா அவளேதான்...” என்று முனகினார் பார்வதி.

இந்த பவிய என்ன
பண்ணினா தேவலை என்று மண்டையை பிய்த்துக்கொண்டான். இவளால தானே இதெல்லாம் எனக் கோபம் வந்தது.

மம்மீ நான் உன் மடில என்று ஏறி உட்கார்ந்தது. திஸ் இஸ் தா லிமிட் என்று நினைத்து,
இதப்பாரு பவி, இது உன் மம்மி இல்லை... என் ஆபிஸ்ல வேலை பண்ற ஆண்ட்டி... உனக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்காங்க.. நீ அவங்கள ரொம்பவே தொல்லை பண்றே... இன்னிக்கி ஒரு நாள் மட்டுமே அவங்க உன்கூட இருப்பாங்க... நாளை காலையில அவங்க வீட்டுக்கு போய்டுவாங்க.... புரியுதா நல்லா கேட்டுக்கோ... இது உன் மம்மி இல்லைடா பவிகுட்டி என்றான் வித்யா அன்பாக ஆனால் அழுத்தமாக
அவ்வளவுதான் கண்ணில் நீர்முட்ட நீங்க என் மம்மி இல்லையா?” என்றது மதுராவை பார்த்து. அவளுக்கு சங்கடமானது. அவள் மௌனமாக இருக்க, பவி என்று அழத் தொடங்கியது.

மூடு வாய, மூடுன்னு சொன்னேன்... நீ என்ன சின்னக்குழந்தையா பிக் கர்ள்னு சொல்லிக்கற... இதென்ன அழுகை... இப்போ வாய மூடறியா இல்லையா என்று வித்யா ஆத்திரப்பட்டு கையை ஓங்க, மேலும் வீறிட்டது.
போதும் வித்யா... அவ நிலைமை தெரிஞ்சும்...” என்று கண்டிக்கும் குரலில் கூறிவிட்டு பவியை தூக்கிக்கொண்டு உள் அறைக்கு சென்றுவிட்டாள் மதுரா.
என்ன இது, அவர் குழந்தை அவர் திட்டறார், அதுவும் எனக்காக பார்த்து... இதுல பேரச்சொல்லி வேற கூப்பிடுட்டேனே. ஏதானும் தப்பா எடுத்துப்பாரோ என்னமோ... கண்டிச்சு வேற பேசிட்டேன் என்று குழம்பியவாறு மெல்ல பவியை மடியில் வைத்து மெல்லிய அரவணைப்பான குரலில் பேச ஆரம்பித்தாள்.
பாரு பவிகுட்டி, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டா. நீ என் செல்லம், ஆனா பாரு அப்பா சொன்னதும் நிஜம்தான். நீ அழாம கேட்டா நான் எல்லாம் சொல்லுவேன் என்றாள்.
என்ன என்பதுபோல பார்த்தது.
நான் உன் அம்மா இல்லைடா தங்கம்... அதுனால நான் எப்போதுமே இங்க தங்க முடியாதுடா... என் வீட்டில தானே நான் தங்கணும் இல்லையா... நீ பிக் கர்ள் ஆச்சே உனக்குதான் எல்லாம் புரியுமே தங்கம்ஸ் என்றாள்.

ஏதோ புரிந்ததுபோல மண்டையை ஆட்டியது
. “அப்போ என் மம்மி?” என்றது.
அவங்க எங்கே இருக்காங்கனு தெரியலை குட்டிமா... ஆனா கண்டிப்பா  வருவாங்கடா... அதுவரை அப்பாவையும் பாட்டியையும் படுத்தாம நீ சமத்தா இருக்கணும்... என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்தானே அதனால நானும் அப்பப்போ வந்து பாத்துக்கறேன் உன்ன. நீயும் என் வீட்டிற்கு வரலாம் சரியா... ஆனா நீ அங்கேயே இருக்க முடியாது நானும் இங்கேயே தங்க முடியாது குட்டி என்று கூறி முடித்தாள்.
எதுவோ புரிந்தது. “சரி நான் உங்கள பார்க்க வரலாமா நீங்களும் வருவீங்கதான் மம்மி என்று ஆரம்பிக்க.

இப்போதானே சொன்னேன்... என்னை ஆண்ட்டின்னு தான் கூப்பிடணும் சரியாச் செல்லம் என்றாள்.
நிச்சயம் வரலாம். நானும் வருவேன். சரி இப்படி வெச்சுக்கலாமா நீங்க சமத்தா இருக்கீங்கன்னு தெரிஞ்சா நான் மாதத்தில் ஒரு நாள் வருவேன்... அதேபோல நீயும் மாதத்தில் ஒரு நாள் வரலாம் சரியா... அன்னிக்கி நாம ஜாலிய இருக்கலாம்... மிச்ச நாள்ள நானும் ஆபீஸ் போகணுமே பிசியா இருப்பேனே, உன்னை பாத்துக்க முடியாது இல்லையா என்றாள்.
ஆமாம் என்றது.
அப்போ டீலா?” என்று கட்டைவிரல் தூக்கி காட்டினாள்.
எஸ் மம் .... ஆண்ட்டி டீல் என்று தயக்கமாக சிரித்தது.
ஆனா ஆண்ட்டி இன்னிக்கி நைட் இங்க இருப்பீங்கதானே. நான் உங்ககூட தூங்கட்டுமா ப்ளீஸ்?” என்றது கெஞ்சியபடி.
சரி நான் உங்கப்பாகிட்ட பேசிப் பார்க்கறேன். நீ போய் கொஞ்சம் பேசாம படுத்துக்கோ செல்லம் என்று படுக்கவைத்தாள்.



No comments:

Post a Comment